வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரப்பிரிவு பின்வரும் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டு வருகிறது.
- நீர்நிலைகளை செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டம்.
- மாநிலத்திலுள்ள அணைகளை தூர்வாரும் பணி
- ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடலோர பாதுகாப்புப் பணிகள்
இப்பிரிவின் கீழ் செயல்படும் வடிவமைப்பு வட்டத்தில், நீர்த்தேக்கம், கால்வாய், ஏரி, அணைக்கட்டு, நீரொழுங்கி, தடுப்பணை போன்ற பாசனக் கட்டுமானங்களுக்கான வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பாசனக் கட்டுமானங்களில் ஏற்படும் வெடிப்புகள், நீர் ஊடுருவல், நீர்க்கசிவு போன்ற பாதிப்புகளுக்கான மாற்றுத் தீர்வுகள், வடிவமைப்பு வட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இப்பிரிவின் கீழ் செயல்படும் மண் தன்மை ஆராய்ச்சிக் கோட்டம், மண்ணின் தன்மை, கற்காரை மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்த சோதனைகளை மேற்கொள்ளும் மைய தரக்கட்டுப்பாடு ஆய்வுக் கூடமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது.
நீரியல் நீர்நிலையியல் ஆய்வுக்கழகம், பூண்டி முதன்முதலில் 1944-ல் நிறுவப்பட்டு நீரியல், நீர்நிலையியல் மற்றும் பாசனம் தொடர்பான அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மாதிரி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரையியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் சில குறிப்பிட்ட இடங்களில் கடற்புற நிகழ்வுகள் கண்காணித்தல் தொடர்பான தரவுகள் சேகரிக்கும் ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வண்டல் மண் படிவினால் நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள கொள்ளளவு குறைவு மற்றும் நீர்த்தேக்கங்களின் பயன்பாட்டு காலம் மதிப்பிடப்பட்டு, நீர்வடிப்பகுதியிலிருந்து நீர்த்தேக்கங்களை சென்றடையும் வண்டல் படிவுகளைத் தடுப்பதற்குத் தேவையான நீர்வடிப்பகுதி மேலாண்மைப் பணிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.