Text added to get Marudham font files don't remove it

A+ A A-

இயக்கம் மற்றும் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு பிரிவு மூலம், மாநிலத்திலுள்ள 15 பெரிய நீர்த்தேக்கங்கள், சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் 6 நீர்த்தேக்கங்கள் மற்றும் காவேரி வடிநிலப்பகுதிகளில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் 4 நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் நீரியல் குறித்த விவரங்கள் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் பில்லிகுண்டுலு நீர் அளவீடு மற்றும் வெளியேற்று நிலையத்தில் நீர் அளவீடுகள் ஆகியவற்றை தொகுத்து நாள்தோறும் அரசுக்கு அறிக்கை அளித்துவருகிறது. தலைமைப்பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அவர்களது அலுவலகத்தில் அமைந்துள்ள நீரளவை பிரிவில் வடகிழக்கு பருவமழை காலங்களில் 24 மணி நேர முறைப்பணி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தின் அனைத்து அணைகள் / நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு மாநில அவசரகால நடவடிக்கை மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. நீர்வள ஆதார தொகுப்பு திட்ட பாசன பகுதிகளில் பங்கேற்பு பாசன மேலாண்மை தொடர்பான பணிகளை கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கைகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பிரிவின் கீழுள்ள மாநில அணை பாதுகாப்பு அமைப்பு மூலம் அணைகளில் காலமுறை பருவமழை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் தொகுக்கப்படுகின்றன. பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அனைத்து அணைகளுக்கான ஒருங்கிணைந்த உறுதித்தன்மை அறிக்கை (ஒருங்கிணைந்த ஆண்டு அறிக்கை) மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

இப்பிரிவின் கீழுள்ள மாநிலத்திட்ட மேலாண்மை அலகு, அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் புனரமைப்பு பணிகள் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணி பணிமனை மற்றும் பண்டக சாலை மூலம் புதிய வாகனங்கள் கொள்முதல் செய்தல், பழைய வாகனங்கள், பயனற்ற இயந்திரங்கள் மற்றும் கருவி தளவாடங்கள் கழிவு நீக்கம் செய்யப்படுகின்றன. மேலும் அணைகள் மற்றும் நீர்தேக்கங்களின் மதகுகள் மற்றும் வழிந்தோடிகளின் கதவுகளுக்கான (Shutters) மதிப்பீடு தயாரித்தல் மற்றும் மண்டல அலுவலகங்களிலிருந்து பெறப்படும் கதவுகளுக்கான மதிப்பீடுகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணை பாதுகாப்பு அமைப்பு

அணை பாதுகாப்புச் சட்டம், 2021 மத்திய அரசால் 14.12.2021 அன்று அறிவிக்கப்பட்டு அதன் விதிகள் 28.12.2021 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் 30.12.2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அணைப் பாதுகாப்புச் சட்டம், 2021-ஐ செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு, அரசாணை (நிலை) எண்.56 நீர்வளத்துறை (டபிள்யு ஆர் 2) நாள் 30.06.2022 மூலம், அணைப் பாதுகாப்புக்கான மாநிலக் குழு மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அமைப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அணை பாதுகாப்புச் சட்டம், 2021- இன் நான்கு முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

அணை பாதுகாப்புக்கான தேசிய குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடுகிறது. இந்தக் குழு கொள்கைகளை உருவாக்கி, அணை பாதுகாப்பு தரநிலைகள் தொடர்பான விதிமுறைகளை பரிந்துரைக்கும். மாநில அரசின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) நீர்வளத்துறை அல்லது அதற்கு சமமான அளவிலான அலுவலர் அணைப் பாதுகாப்பு குறித்த தேசிய குழுவில் உறுப்பினராக கலந்து கொள்வதற்காக சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.