தமிழ்நாட்டின் ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர் வள ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக மிக நுண்ணிய அளவிலான ஆராய்ச்சியின் அடிப்படையில் மதிப்பிடுதல், எதிர்கால தேவைகளை கணக்கிட்டு திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள 1974 ஆம் ஆண்டு நீர் ஆய்வு நிறுவனம் நிறுவப்பட்டது. மேலும், தரக்கட்டுப்பாடு கோட்டங்கள் இந்த நிறுவனத்துடன் 2018 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு நீர் ஆய்வு, நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
நீர் ஆய்வு, நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் தொலையுணர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இத்தொலையுணர்வு மையம் ஆற்றுப்படுகைகள் தொடர்பான புவியின் மேற்பரப்பில் உள்ள நீர் வளங்கள் மற்றும் அதை சார்ந்த பூகோள விவரங்களை செயற்கைக்கோள் சார்ந்த பூலோக வரைபடங்கள் மூலம் மதிப்பிட்டு, திட்டமிட்டு அதன் விவரங்களை நிர்வகித்து உபயோகிக்கும் துறைகளுக்கு தெரிவிக்கும் பணிகளை கவனித்து வருகிறது.
நீர் ஆய்வு, நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் தற்போது 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆராய்ச்சி பணிகளாக சென்னை படுகையின், ஆற்று வடிநிலங்களில் நீர்வள மேலாண்மை மற்றும் திட்டமிடுதலுக்கு தேவையான நுண்ணிய அளவிலான மறுமதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் ஆய்வு, நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் தொழில்நுட்ப நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உரிய பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கும் பயனுள்ளதாக இருகின்றது.
நீர் ஆய்வு, நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நான்கு தரக்கட்டுப்பாடு கோட்டங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூரை தலைமை இடங்களாக கொண்டு நீர்வளத்துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் தரக்கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன
தற்போது பின்வரும் வலைதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
- தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு
- செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளை பற்றிய தகவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு
- தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டப் பகுதியில் தீர்வுகாணும் உறுதுணை அமைப்பு உருவாக்கம்
இவ்வலைதளங்கள் 2024 - 2025 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும்.